search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக பேனர்"

    ஆரணி அருகே தி.மு.க. பேனர் வைக்கப்பட்டதால் தகராறு ஏற்பட்டு தாலிகட்டும் நேரத்தில் திருமணம் நின்றது. இதனால் மணப்பெண் உறவினரை மணந்தார்.

    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள ராந்தம் தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். தி.மு.க. பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மகள் சந்தியா. இவருக்கும் அரையாளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். மாப்பிள்ளை வீட்டார் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

    இன்று காலை அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். மணமக்களை வாழ்த்தி ராஜகோபால் தரப்பினர் தி.மு.க. பேனர் வைத்தனர். தி.மு.க. கட்சி கொடி கட்டியிருந்தனர்.

    நேற்று இரவு மணமக்கள் அழைப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


    இன்று அதிகாலை திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்தது. அப்போது மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த தி.மு.க. பேனரால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. திருமண செலவு எங்களுடையது அதில் மணப்பெண் வீட்டார் எப்படி தி.மு.க. பேனர் வைக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். இது பின்னர் மோதலாக மாறியது. கைக்கலப்பும் ஏற்பட்டது.

    இதனால் திகைத்து போன மணப்பெண் சந்தியா திருமணத்திற்கு முன்பே இவ்வளவு பிரச்னை என்றால் இன்னும் பின்னர் என்ன பிரச்னை எல்லாம் ஏற்படுமோ என பயந்தார். இதனால் எனக்கு இந்த திருமணத்தில் விரும்பமில்லை என்று கூறினார்.

    இதனால் மணமகன் வீட்டார் கோபித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

    திகைத்து போன மணப்பெண் வீட்டார் எப்படியும் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என எண்ணினர். ராஜகோபாலின் தங்கை மகன் ஏழுமலை (27) என்பவரிடம் திருமணம் குறித்து பேசினர். அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து ஏழுமலைக்கும் சந்தியாவுக்கும் அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி சண்முகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×